Tuesday, October 02, 2007

சிவபெருமானும் ஆதிநாதரும் - 1

சிவபெருமானும் ஆதிநாதரும்


சைவர்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமான். சமணர்களின் முதற் கடவுள்
ஆதிநாதர். இந்திய சமய வரலாற்றில் வேறெந்த கடவுளர்களுக்கும் இல்லாத
ஒற்றுமைகள் இந்த இரு கடவுளுக்கும் இருக்கின்றன. இச்சிறு கட்டுரையின்
நோக்கம் இந்த இரு கடவுளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை ஒப்பு
நோக்கிப் பார்ப்பதுதான். இந்த முயற்சி ஒன்றும் புதிதல்ல. முன்னமே
நிறைய அறிஞர்கள் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். மயிலை. சீனி.
வேங்கடசாமி அவர்களும் "சமணமும் தமிழும்" என்ற தம் நூலில்
கூறியிருக்கிறார். இங்கு அதையே மேலும் விரித்து விளக்கிக் கூற
முயன்றிருக்கிறேன். நிறைய வலைஞர்களுக்கும், வலையுலா
வருபவர்களுக்கும் இது புது கருத்தாகவும்,
செய்தியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.



ஒற்றுமைகள்:



1. சிவபெருமான்: சைவர்களின் முழுமுதற் கடவுள்.
பகவான் ஆதிநாதர்: சமணர்களின் முதற் தீர்த்தங்கரர் (கடவுள்).

2. சிவன்: இவரை "பிறவாயாக்கை பெரியோன்" என்றழைப்பர். யார்
வயிற்றிலும் பிறவாமல் தோன்றிய தலைவன் என்பது கருத்து.
ஆதிநாதர்: இவருக்கும் இப்பெயர் பொருந்தும். இவர் நம்மை போன்று
மனிதனாகப் பிறந்து, இருவினைகளில் இருந்து விடுபட்டு மீண்டும்
பிறவாத நிலையடைந்ததால், பிறவா யாக்கை பெரியோன் என்று
போற்றப்பட்டார்.

3. சிவன்: இவருக்கு இரண்டு மகன்கள். விநாயகன் மற்றும் முருகன்.
ஆதிநாதர்: இவருக்கும் இரண்டு மகன்கள். பரதன் மற்றும் பாகுபலி.

4. சிவன்: ஒரு பழத்துக்காக, இரண்டு மகன்களும் சண்டையிட்டனர்.
ஆதிநாதர்: அரசாட்சிப்பதவிக்காக, இரண்டு மகன்களும் சண்டையிட்டனர்.

5. சிவன்: இச்சண்டையில், இளைய மகனான முருகன் கோபித்துக்
கொண்டு, ஆண்டியாக சென்றான். (பழனியாண்டி)
ஆதிநாதர்: இச்சண்டையில், இளைய மகனான பாகுபலி, தன் அண்ணனிடமே
சண்டையிட்டதை நினைத்து மனம் வெறுத்துப்போய், முற்றும் துறந்து ஆண்டியாக
சென்றான். (கோமடேசுவரர் அல்லது பாகுபலி, சிரவணபெளிகுளம்)

6. சிவன். இவர் சடா முடியுடன் தோற்றமளிப்பதால், கேசவன் என்று
அழைக்கப்பட்டார்.
ஆதிநாதர்: இவர் நீண்ட காலங்கள் தொடர்ந்து தவம் இயற்றியதால், முடி வளர்ந்து,
சடைமுடிக் கொண்டவராகக் காட்சியளித்ததால், இவருக்கும் இப்பெயர் அமைந்தது.

"ஆலநெடு நிழலமந்தனை
காலம் மூன்றும் கடந்தானை
தாழ்சடை முடிசென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை" - திருக்கலம்பகம்


7. சிவன்: சிவனின் இருப்பிடம் கயிலாயமலை.
ஆதிநாதர்: ஆதிநாதர் வீடுபேறடைந்ததும் திருகயிலாயமலை என்ற இதே
இடத்தில்தான்.

8. சிவன்: சைவர்களுக்கு 'சிவராத்திரி" மிக முக்கியமான நாள்.
(ஏன் என்று தெரியாது?)
ஆதிநாதர்: ஆதிநாதர் வீடுபேறு அடைந்த நாளை, சமணர்கள் "சிவராத்திரி"யாகக்
கொண்டாடுகிறார்கள்.

9. சிவன்: சிவனுடைய வாகனம் எருது.
ஆதிநாதர்: ஆதிநாதருடைய "இலஞ்சினம்" (சின்னம்) எருது. எருது அறத்தின்
சின்னமாக கருதப்படுகிறது. ஆதிநாதரே, உலகிற்கு அறத்தைப் போதித்தவர்.
இல்லறம், துறவறம் என்று பிரித்து அறம் உரைத்தவரும் இவரே. ஆதலால்,
இவர் சிலையின் அடியில் எருது சின்னத்தைப் பொறித்து வைத்தனர் சமணர்கள்.

10.சிவன்: இவருடைய பரிவாரத் தெய்வங்களில் "நந்திதேவர்" முதன்மையானவர்.
ஆதிநாதர்: இவருடைய பரிவாரத் (சாசன) தெய்வங்களில் முதன்மையானவர்
கோமுகயட்சன்.

11.சிவன்: இவர் காலனை உதைத்தார். அதாவது எமனை வென்றவர்
என்பது கருத்து.
ஆதிநாதர்: காலன் இறப்புக்கு உருவகம். இறப்பையும், பிறப்பையும் கடந்தவர்
ஆதலால், காலைனை கடிந்தவர் ஆனார்.

"கன்று காலனைக் கடிந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்!
தொன்று மூத்தலைத் துறந்தாய்! தோற்ற மாக்கட லிறந்தாய்!" - நீலகேசி

12.சிவன்: சிவபெருமான் காமனை (காமத்தை)எறித்தவர்.
ஆதிநாதர்: காம உணர்ச்சி காமனுக்கு (மன்மதன்) உருவகம். ஆதிநாதர்
மோகனீயக் கருமத்தை வென்றவர்.

"களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப" - சீவக சிந்தாமணி

13.சிவன்: இவர் முப்புரத்தை எரித்தார். மூன்று கோட்டைகளை அழித்தார்
என்றும் மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) எரித்தார் என்றும்
சொல்லப்படுகிறது. எங்ஙனமெனில், இவர் இயற்கையாகவே இந்த மூன்றும்
இல்லாதவர். பக்தர் பொருட்டு, அம்மூன்று மலங்களையும் அழித்தவர்.
ஆதிநாதர்: இவரும் முப்புரத்தை எரித்தார் என்று கூறப்படுகிறது. அதாவது
காமம், வெகுளி, மயக்கம் என்ற குணங்களை தன்னிடம் வராமல் தடுத்து
வென்றவர் என்பது கருத்து.

"ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா' - சிலப்பதிகாரம்

14.சிவன்: இவர் மனைவியாகிய உமையாளுக்கு தன் உடம்பில் பாதியைக்
கொடுத்தவர். ஆதலால், "அர்த்தநாரீஸ்வரர்" எனப்பட்டார்.
ஆதிநாதர்: இவருக்கும் "அர்த்தநாரீஸ்வரர்" என்ற திருநாமம் உண்டு.
சமணத்தில். கல்வியையும், அறிவையும் (இருவினைகளை அகற்றியதனால்
பெறப்படும் அறிவு. வாலறிவு என்றும் கேவல ஞானம் என்றும் அழைப்பர்),
மோட்சத்தையும் (நிர்வாணம்) பெண்களாக உருவகிப்பார்கள். ஆதிபகவன்,
இருவகை வினைகளையும் வென்று, கேவல ஞானம் (அறிவு) என்னும்
அரசியைப் பெற்றதனால் (மணந்ததினால்), "அர்த்தநாரீஸ்வரர்"
என்றழைக்கப்பட்டார்.

"பிரச நாள்மலர்ப் பிண்டியிற் கண்டபே ரமுதே
பிறங்கு பேரொளிக் கேவலத் தரசியைப் பிரியா
அரச னேதிரு நறுங்கொண்டை வடதிரு மலைமேல்
அப்ப னேஅடி யேனையும் அஞ்சல்என் றருளே" - திருநறுங்கொண்டைப் பதிகம்

15.சிவன்: இவருக்கு இரண்டு கண்கள் தவிர நெற்றியில் மற்றொரு கண்
அமைந்ததினால், "முக்கண்ணன்" என்று போற்றப் பெற்றார்.
ஆதிநாதர்: இவர் வாலறிவு (கேவல ஞானம்) பெற்றதனால், அறிவை
கண்ணுக்கு உருவகப்படுத்தி "முக்கண்ணன்" என்று அழைக்கப்பட்டார்.
இவருக்கு ஊனக் கண்கள் இரண்டு, அறிவுக் கண் ஒன்று; மொத்தம்
மூன்று கண்கள்.

16.சிவன்: திரிசூலம் என்னும் ஆயுதத்தை வைத்திருப்பவர்.
ஆதிநாதர்: சமணர்கள் மூன்று இரத்தினங்களைப் போற்றுவர். அவை
"திரைரத்னா" என்று வடமொழியில் அழைக்கப்படும். அவை நற்காட்சி,
நல்லறிவு, நல்லொழுக்கம் என்பனவாம். பிராகிருத மொழியில் சூல்
என்பதற்கு மணி என்ற பொருளும் உண்டு. ஆதலால், இவருக்கு
மூன்று இரத்தினங்களைத் தரித்தவர் என்ற கருத்தில் திரிசூலம் காட்டப்படும்.

17.சிவன்: இவரிடம் இருந்தே "ஓங்காரம்" என்ற ஒலி பிறந்ததாகவும்,
அதிலிருந்தே எழுத்துக்கள் தோன்றின என்பார் பாணினி.
ஆதிநாதர்: இவர் தம் மகள்களான பிரம்மி, சுந்தரி என்பவர்களுக்கு
எண்ணும், எழுத்தும் கற்பித்தவர். பிரம்மிக்கு எழுத்தையும், சுந்தரிக்கு
எண்ணையும் கற்பித்தார் என மகாபுராணம் கூறும். தமிழில் சூடாமணி
நிகண்டு பின்வருமாறு கூறுகிறது.

"எண்ணோடு எழத்திரண்டும் இயம்பிய ஆதிமூர்த்தி" - சூடாமணி நிகண்டு.

தற்கால எழுத்துக்கள் எல்லாம் பிரம்மி என்னும் எழுத்துருவை அடிப்படையாகக்
கொண்டது என்பது சிந்திதற்பாலது. ஒரு கொசுறுச் செய்தி - எழுத்துக்கள்
வலப்பக்கத்தில் இருந்தும், எண்கள் இடப்பக்கத்தில் இருந்தும் தொடங்கவேண்டும்
என்று ஆதிநாதர் தம் மகள்களுக்கு அறிவுறித்தியதாக "அவஸ்யக நில்யுக்தி"
என்னும் சமண நூல் கூறுகிறது.


முதற் பாகம் முற்றிற்று!


இரா. பானுகுமார்,
சென்னை.

7 comments:

கோவி.கண்ணன் said...

பானுகுமார் ஐயா,

நீங்கள் சிவனை ஒப்பிடுவதாக சொல்லி ருத்திரனை ஒப்பிட்டு இருக்கிறீர்கள்.

சைவர்களின் சிவனும், வைதீகர்களின் ருத்திரனும் ஒன்றல்ல.

மேலும் பிள்ளையார், முருகன் போன்றோர் சிவனுக்கு பிள்ளை என்பதெல்லாம் வெறும் புனைவு கதைகள். எனவே அவற்றையும் வரலாறையும் ஒப்பிடுவது எந்த அளவு சரி என்று தெரியவில்லை.

சைவ சமயபாடல்களிலும் 'மூவரும் முப்பத்து மூவரும் தேவரும் காணாச் சிவபெருமான்' என்று தான் சொல்லி இருக்கிறார்கள். அந்த மூவரில் அழித்தல் கடவுள் ருத்திரனும் ஒருவர் என்ற விளக்கம் இருக்கிறது.

வாழ்ந்து மறைந்தவர்களை அவர்களின் தொண்டுள்ளத்தை வைத்து இறை நிலைக்கு ஒப்பிடலாம். ஆனால் அதுவே இறை என்று சொல்வதை எந்தமதத்தினரும் ஏற்க மாட்டார்கள். தேவ தூதனாகத்தான் ஏசுவும், முகமதுவும் அறியப்படுகிறார்கள். நான் சொல்வது கவுதமபுத்தருக்கும் பொருந்தும். சமணம் பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது.ஆனால் சமணம் சரியான பாதையில் சென்றிருந்தால் பவுத்தம் வந்திருக்காது என்பது என்கருத்து.

உதவு செய்பவர்கள் தெய்வமாக தெரிவது போல் மதத்தை தோற்றுவித்தவர்களும் அந்தந்த மதத்துக்காரர்களுக்கு இந்திய அளவில் தெய்வமாக தெரிவார்கள் என்ற பொருளில் எடுத்துக் கொள்கிறேன்.

இது எனது கருத்துமட்டுமே. உங்கள் இடுகையை குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல.

Banukumar said...

கோவி.கண்ணன் ஐயா,

தங்கள் பின்னூட்டுக்கு நன்றி.

1. சிவனும் உருத்திரனும் வேறுமைப் பற்றி தெரியப்படுத்தினால் நன்றாய் இருக்கும். உடனே எழுதவேண்டும் என்பதில்லை. நேரம் கிட்டும் போது இதுப்பற்றி எழுதுங்கள் ஐயா. யான் இதுப் பற்றி ஒரு குழுமத்தில் எழுதியிருக்கிறேன்.

2. பிள்ளையார், முருகன் சிவன் உறவு முறைப் பற்றி யானும் அறிவேன். எதனால், இவ்வுறவு முறை ஏற்பட்டது?

3. /வாழ்ந்து மறைந்தவர்களை அவர்களின் தொண்டுள்ளத்தை வைத்து இறை நிலைக்கு ஒப்பிடலாம். ஆனால் அதுவே இறை என்று சொல்வதை எந்தமதத்தினரும் ஏற்க மாட்டார்கள். தேவ தூதனாகத்தான் ஏசுவும், முகமதுவும் அறியப்படுகிறார்கள். நான் சொல்வது கவுதமபுத்தருக்கும் பொருந்தும்./

என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது. இறைவன் பற்றி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கருத்தைக் கொண்டிருக்கின்றன. அவ்வாறே சமணத்திலும் இறைவன் கோட்பாடு உண்டு. மற்ற மதத்திற்கும் சமணத்திற்கும் உள்ள ஒரே வேற்றுமை இவ்வுலகம் ஒருவரால் படைத்ததன்று. அது இயற்கையானது, அனாதியானது, என்றும் நிலைத்திருப்பது, இன்னும் நிலைத்துக் கொண்டிருப்பது என்பதுதான் அது.

பின் ஏன் அருகருக்கும் சிவனுக்கும் ஒற்றுமை கூறவந்தேன்? தமிழ்த் தென்றல் கூறுவார் ஒவ்வொரு சமயத்திற்கும் (மதம்) அகம், புறம் உண்டு. யான் புற ஒற்றுமையைச் சுட்ட வேண்டி எழுதினேன். சைவமும் சமணமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். இது என் கருத்து அல்ல. இந்த இரு மதங்களிடம் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்த அறிஞர்கள் அவ்வாறே சொல்லியிருக்கின்றனர்.

4. /ஆனால் சமணம் சரியான பாதையில் சென்றிருந்தால் பவுத்தம் வந்திருக்காது என்பது என் கருத்து/

சமணத்தின் அந்த சரியில்லாத பாதை எது?

சமணத்திற்கும் பவுத்ததிற்கும் இருக்கும் உறவு இஸ்லாமிய, கிருத்துவ மதங்களின் உறவு போன்றது. சமணத்தில் 23 தீர்த்தங்கரர்களும், பெளத்த 23 புத்தர்களும் ஒருவரே. 24வதில் தான் வேறுபாடு. ;-)


இரா.பானுகுமார்,
சென்னை.

Aroorprince said...

//சமணத்தில் 23 தீர்த்தங்கரர்களும், பெளத்த 23 புத்தர்களும் ஒருவரே. 24வதில் தான் வேறுபாடு//
பானுகுமார் அவர்களே, சமணத்தில் 24 தீர்த்தங்கரர்கள் உண்டு என அறிவேன்.
பெளத்த சம்பிரதாயத்திலுமா புத்தருக்கு முன் ஆதி புத்தர்கள் உள்ளனர்?

Aroorprince said...

//ஆதிநாதர்: இவருக்கும் இரண்டு மகன்கள். பரதன் மற்றும் பாகுபலி.
இந்து மதத்தில் பரத மன்னன் ஒருவர் இருந்தார். அதன் பொருட்டே இந்தியா பரத கண்டம் என அழைக்கப்படுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.
நீங்கள் கூறும் பரதனுக்கும் நான் சொல்லும் பரதனுக்கும் தொடர்பு இருக்குமா?
மேலும் சின்னம் என்பதற்கு நீங்கள் “இலஞ்சினை” என்னும் பதம் உபயோகித்து இருந்தீர்கள்.
சிவகாமி சபதத்தில் - கல்கி இலச்சினை என்னும் பதம் பயன்படுத்தி இருந்ததாக நினைவு.
இலச்சினையா? இலஞ்சினையா?
இல்லை இரு பதமும் தமிழில் உண்டா?

Aroorprince said...

எங்கே உங்கள் நீலகேசி நையாண்டி
பதிவு?
பதிவின் முகவரி தரவும்.

rishikss said...

Hi, give me the link of other parts to read

Anonymous said...

போதிசத்துவரும், ப்ரம்மதத்தரும் ==பவுத்தம் , சமணம்
பெளத்தம், சமணத்தை எதிர்த்ததில்லை. சமணம் பெளத்தத்தை எதிர்த்ததில்லை.
இந்திய சமயங்கள் பிற நாட்டு மொழி, கலை, கலாச்சாரங்களை அழித்ததில்லை. மேலும் இதுதான் சரியான் வழி என்று கட்டாய படுத்தவில்லை, தினித்ததில்லை. ஆகையால் இந்திய சமயங்களை ஆப்ரஹாமிக் சமயங்களோடு ஒப்பிட வேண்டாம்.